ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!
ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இன்றைய தினம் (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான, சட்டத்தரணி எப். யூ. வூட்லர், அதிக ஒலி எழுப்பப்படும் நிகழ்வுகள், திறந்தவெளி இசை நிகழ்ச்சிகள், இரவுநேர விருந்துகள் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிர்வலை ஒலிபெருக்கிகள் மூலம் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
இத்தகைய ஒலி மாசுபாட்டை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையாகக் கருதாமல், தீவிர ஆரோக்கியச் சிக்கலாகக் கருதி பொலிஸார் சட்டத்தை உறுதியாக நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய, திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி உண்டு.
குறித்த நேர வரம்புகள் மற்றும் அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறுவோருக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு சாதனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படும்.
அத்துடன், இந்நிகழ்வுகளின் அமைப்பாளர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பொதுமக்கள் இத்தகைய அசௌகரியங்களை எதிர்கொண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி எண்களையோ தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறு இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான, சட்டத்தரணி எப். யூ. வூட்லர் கேட்டுக்கொண்டுள்ளார்.