உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வடக்கின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.”

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்திருந்தார். இதற்கமைவாக ஆளுநர் செயலகத்தில் வடக்கின் விவசாய மேம்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் பிரதான வாழ்வாதாரம் விவசாயம் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துடன் முன்னெடுத்த கலந்துரையாடலின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல குளங்கள் மிக நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமையால் கடந்த ‘டித்வா’ பேரிடரின் போது அவை பாதிப்புகளை எதிர்கொண்டமையை அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2012ஆம் ஆண்டு வனவளத் திணைக்களம் கூகுள் வரைபட உதவியுடன் கமநல சேவைகளின் குளங்களைத் தமதாக்கிக் கொண்டமை மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உவர்நீர் தடுப்பணைகள் இன்மையால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைவடைதல் போன்ற பிரச்சினைகளையும் ஆளுநர் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

வடக்குக்குத் தேவையான நெல் களஞ்சியங்கள், நெல்லை உலரவிடும் தளங்கள் மற்றும் இயந்திரங்களின் அவசியம் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம், வடக்கின் விவசாய மேம்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு வாய்ப்பளித்தமைக்காக ஆளுநருக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

நெல் மற்றும் சின்ன வெங்காய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பாரிய பங்களிப்பைப் பாராட்டிய அவர், மாகாணத்திலுள்ள இரண்டாயிரம் சிறிய குளங்கள் தொடர்பில் தமது திணைக்களம் முழுக் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரால் விசேட செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய விரிவான ஆவணம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறிப்பாக, விவசாயத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, ஆரம்பக் கலந்துரையாடலுக்கு மாத்திரம் மாகாண அதிகாரிகளை அழைக்காது, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாகாண நிர்வாகத்துடனும் அதன் முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.  

மேலும், விவசாய அமைச்சின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டது.

கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகையிலுள்ள குளங்களில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குக் கையளிக்கக் கூடிய குளங்களை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அடையாளப்படுத்தி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியுடன் தமக்கு அனுப்புமாறும், அவற்றை கையளிக்கத் தயார் என்றும் ஆணையாளர் நாயகம் உறுதியளித்தார்.

நெல் பயிர் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுவதைப் போன்று ஏனைய பயிர்களுக்குமான விவசாயத் தரவுகளைத் திரட்டும் புதிய அணுகுமுறைக்கு ஆணையாளர் பூரண ஆதரவை வெளியிட்டார். நெல்லுக்கு மாத்திரமன்றி மாற்றுப் பயிர்ச்செய்கைகளுக்கும் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் அரச மானியத்துடன் உரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

மாகாணத்துக்கே உரித்தான விசேட பணப்பயிர்களையும் இலவசப் பயிர் காப்புறுதித் திட்டத்திற்குள் உள்வாங்குவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  

விவசாய வீதிகளை அமைப்பது தொடர்பில் தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் விசேட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்று  ஆணையாளர் தெளிவுபடுத்தினார். அத்துடன், விவசாய அமைப்புக்களை அனைத்துச் செயற்பாடுகளிலும் உள்வாங்குதல் மற்றும் யாழ்ப்பாணத்தில் வடிகாலமைப்புகளைச் சீரமைக்கும் திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.  

மாவட்ட மட்டத்திலான பிரச்சினைகளும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன. ‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களில் மண் நிரவுகை செய்வதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என்று மன்னார் மாவட்டச் செயலாளரின் கோரிக்கைக்கு ஆணையாளர் பதிலளித்தார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் தொடர்பான சிக்கல்களுக்கும், முல்லைத்தீவில் வனவளத் திணைக்களத்தின் பிடியிலுள்ள வயல் நிலங்கள் குறித்தும் துரித கவனம் செலுத்த இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், வடக்கின் நெல் அறுவடைக் காலத்தைக் கருத்திற்கொண்டு பொதுவான சுற்றறிக்கைகளில் உள்ள இடர்களைத் தீர்க்கவும், சிறுபோக நெல் கொள்வனவு விலையை 120 ரூபாவிலிருந்து அதிகரிக்கவும், விவசாயிகளின் மேலதிகப் பயிர்ச்செய்கையைக் கண்காணிக்கக் கமநல சேவைகள் திணைக்களத்தின் இணையத் தரவுத் தளத்தை அணுக மாவட்டச் செயலகங்களுக்கு அனுமதி வழங்குமாறும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் விசேட கோரிக்கைகளை முன்வைத்தார்.

மேலும், விவசாயச் சங்கங்களின் கணக்குகளைப் பேணுவதில் வவுனியா மாவட்டத்தின் சிறப்பான நடைமுறையை மாகாணம் முழுவதும் பொதுவான ஒழுங்குமுறையாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விசேட விவசாயச் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் ‘சிறியளவிலான விவசாய முயற்சியாண்மை மற்றும் நிலைபேறான செயற்றிட்டம்’ ஊடாக விவசாயிகளின் நிலைபேறான தன்மையையும், சந்தை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதன் முன்னேற்றம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இத்திட்டத்தைத் துரிதப்படுத்த மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

மேலும், நிறைவுக் கட்டத்திலுள்ள ‘காலநிலை சீர்மிகு நீர்ப்பாசன விவசாயத் திட்டம்’ குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன், ‘ரூபன்’ திட்டத்தின் முன்னேற்றங்களைக் கண்காணிக்க மாகாண மட்டத்திலான வழிநடத்தல் குழுவொன்றை அமைக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், கிளிநொச்சி மேலதிகப் பணிப்பாளர் (ஆராய்ச்சி), கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஐந்து மாவட்டங்களினதும் பிரதி மற்றும் உதவி ஆணையாளர்கள், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் திணைக்களங்களின் பிரதிப் பணிப்பாளர்கள், மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள் மற்றும் சியாப், சார்ப், ரூபன், செயற்றிட்டங்களின் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

70 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0