போரை முடிவுறுத்த 15 யோசனைகளை முன்வைத்த அமெரிக்கா.!
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
போர் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஈரானுக்கு முக்கியமான சலுகை ஒன்றை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும், மேலும் 15 அம்சங்களைக் கொண்ட தீர்வுத் திட்டம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானில் உள்ள தொடர்புடைய தரப்புகளுடன் அமெரிக்கா கலந்துரையாடி வருவதாகவும், ஒப்பந்தத்தை எட்ட ஈரான் ஆர்வமாக உள்ளது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய தூதர்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், பேச்சுவார்த்தை நடைபெறும் முறையிலும் பிரதிநிதித்துவ மட்டத்திலும் மாற்றங்களை ஈரான் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ட்ரம்பின் தூதர்களைத் தவிர்த்து, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடருமானால், அவை நடுநிலையான இடத்தில், குறிப்பாக பாகிஸ்தான் போன்ற நாட்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிராந்திய பாதுகாப்பு மற்றும்அணுசக்தி தொடர்பான விவகாரங்களில் ஈரான் பேசத் தயாராக இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்தும் தரப்புகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டானோன் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் இராணுவ இலக்குகளைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறாக, பேச்சுவார்த்தை முயற்சிகளும் இராணுவ நடவடிக்கைகளும் இணைந்து நடைபெறும் நிலையில், பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.