ஸ்கொட்லாந்து கடற்படைத் தள நுழைவு முயற்சி – கைதான ஈரானியர் விடுவிப்பு.!
ஸ்கொட்லாந்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கிளைட் கடற்படைத் தளத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஈரானியர் ஒருவர், மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
34 வயதான குறித்த நபர், 31 வயதான ருமேனியப் பெண் ஒருவருடன் கடந்த வியாழக்கிழமை ஸ்கொட்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள முக்கிய கடற்படைத் தளத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.இந்த நபர் டம்பார்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான வழக்கு இன்னும்நிலுவையில் உள்ளதுடன், இதே சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ருமேனியப் பெண்ணுக்கு எதிராக தற்போது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்காலத்தில் புதிய சான்றுகள் கிடைத்தால் வழக்கை மீண்டும் முன்னெடுக்க உரிமை உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.‘ஃபாஸ்லேன்’ என அழைக்கப்படும் குறித்த கடற்படைத் தளம், ஐக்கிய இராஜ்ஜியத்தின் நீர்மூழ்கிக் கப்பல் படையின் முக்கிய மையமாகவும், அணு தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் முக்கிய நிலையமாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது.