முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத முறையில் சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சேகரித்த குற்றச்சாட்டில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் மார்ச் 31 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக இருந்த காலத்தில், தனது உத்தியோகபூர்வ வருமானத்திற்கு மேலாக 243.8 மில்லியன் ரூபா ஈட்டியதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக, அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து மொத்தம் 27 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக மனைவியின் வங்கி கணக்கின் ஊடாக 34 மில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணைகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்பதால், சந்தேகநபரின் பிணை கோரிக்கையை நிராகரித்து, அவர் மார்ச் 31 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.