மட்டக்களப்பு மாநகர எல்லையில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து கலந்துரையாடல்.!
மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டுக் குழுவைச் சார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில், மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.நகர எல்லைக்குள் உள்ள விளையாட்டு மைதானங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் விளையாட்டுத்துறையின் மேம்பாடு தொடர்பான விடயங்கள் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.
பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் மைதானங்களை முறையாக பராமரித்து பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. மைதானங்களின் சுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் மேம்பாடு மற்றும் எதிர்காலத்தில் புதிய விளையாட்டு திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்க மாநகர சபையும் பாடசாலைகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது பற்றியும் பேசப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மாநகர விளையாட்டுக் குழுத் தலைவர் கருணாநிதி ஜனகன், குழு உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
