பிள்ளையானை சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்.!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவை விசாரித்த நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழாம், தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை அவரது சட்டத்தரணிகள் சந்தித்து ஆலோசனைகளைப் பெற அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்தது.
இந்த மனு, 2016ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
விசாரணையின் போது, மனுதாரர்தரப்பு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, தொடர்புடைய குற்றச்சாட்டுகள் பின்னர் நீதிமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தற்போது வேறு ஒரு சம்பவம் தொடர்பாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போதைய மனு குறித்து அவரிடமிருந்து ஆலோசனைகள் பெற முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியாளர், சட்டத்தரணிகள் முறையான கோரிக்கை முன்வைத்தால் சந்திப்பு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவித்தார்.இதனையடுத்து, தேவையான ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதியரசர்கள் குழாம் அறிவித்தது. மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.