ஈரானுக்கு எதிரான அழுத்தங்களை கண்டித்து கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்.!
சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கொழும்பில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“பாலஸ்தீனத்தின் நண்பர்கள்” அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட வாசக அட்டைகளை ஏந்தியிருந்தனர். “ஈரான் மீது கை வைக்காதே”, “அமெரிக்க–இஸ்ரேல் பயங்கரவாதத்தை நிறுத்து”, “ஈரான் மீதான போரை தவிர்” உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.