வன்னியில் கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தலுக்கு சவால்கள்.!
வன்னிப் பிராந்தியத்தில் இந்த அரசால் முன்னெடுக்கப்படுகின்ற கல்வி மறுசீரமைப்பை வெற்றிகரமாக்குவதில் வளப்பற்றாக்குறைகளும், போதியளவான இடவசதியின்மையும் சவாலாக காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு வன்னிப் பாடசாலைகளில் கல்வி மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சவாலாக உள்ள விடயங்கள் எப்போது சீர்செய்யப்படுமென பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்ட விடயத்தினை ஏற்றுக்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, அவ்வாறு கல்வி மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சவாலாக உள்ள விடயங்களை தாமும் கண்டறிந்துள்ளதாகவும், அவ்வாறு சவாலாக உள்ள விடயங்கள் கட்டங்கட்டமாகச் சீர்செய்யப்படுமெனவும் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றில் 04.03.2026 நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் நாடாளுமன்ற உறப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியபோதே பிரதமர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்புகையில்,
சமமான மற்றும் நியாமான கல்வி அணுகலை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக கல்வி அமைச்சின் “இலங்கையின் பொதுக்கல்வியை நிலைமாற்றம் செய்தல்” எனும் அறிக்கை குறிப்பிடப்படுகிறது.
ஸ்ரெம் பாடங்களில் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) விசேட கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் நிலவும் சவால், வளப்பற்றாக்குறையும், போதியளவு இடவசதி இன்மையுமே. கட்டி முடிக்கப்படாத கட்டடங்களால் மாணவர்களின் செயற்பாட்டுக் கற்கை பாதிக்கப்படுகிறது.
பரிசோதனைகளுக்கும் தகவல் தொழில்நுட்ப செயன்முறைகளுக்குமான செயற்பாட்டறைகள் வன்னியில் பெரும்பாலான பாடசாலைகளில் போதுமானமாக இல்லை. ஒரு வகுப்பறையை விடவும் மிகவும் சிறிய அளவிலான கட்டடங்களுள் இயங்கும் ஆய்வுகூடங்களும் வன்னி மாவட்ட பாடசாலைகளில் உள்ளன.
பரிசோதனைகளுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளுக்கும் போதுமான வளங்கள் இல்லாதிருப்பதோடு செயற்பாடுகளுக்கான இடவசதியும் இல்லாதிருப்பது வெற்றிகரமான கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தலுக்கு சவாலாகும்.
எனவே தீவளாவிய வகையில் மறுசீரமைப்புக்கு அத்தியாவசியமாகும் வள நிரப்பலில் குழுச்செயற்பாடுகளின் அடிப்படையிலேனும் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப செயன்முறை அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு போதுமான கணினிகள் 2026 இல் பாடசாலைகளுக்கு வழங்கப்படுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது பதிலளிக்கையில்,
இவ்வாறாக பாடசாலை வளங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிரப்புவதுதான் கல்வி மறுசீரமைப்பின் முக்கியமான இலக்காகும்.
பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இங்கே சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் மிகவும் சரியானவை.
அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் கட்டாயமாக முடிவுகளை எடுத்தாக வேண்டும்.
இதற்காகவே நாங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை பிரதான தூணாக எடுத்துக்கொண்டு, பாடசாலைகளின் உட்கட்டமைப்புக்களைச் சீர்செய்வதற்கு ஒதுக்கீடுகளைச் செய்துள்ளோம்.
குறிப்பாக ஆய்வுகூடங்கள், தொழில்நுட்பக் கருவிகள் தொடர்பாக நாங்கள் குறிப்பிட்டளவான நிதியை 2026இல் ஒதுக்கியுள்ளோம்.
இரண்டாம் தரப் பாடசாலைகளில் போதுமான வசதிகளற்ற பாடசாலைகளை ஏற்கனவே நாம் கண்டறிந்துள்ளோம்.
அவ்வாறான இரண்டாம் தரப் பாடசாலைகளுக்கு ஆகக் குறைந்தது ஒரு திறன் வகுப்பறையாவது ஒதுக்கியாக வேண்டும்.
அத்தோடு சிறந்ததொரு தொழில்நுட்ப வலைத்தள தொடர்பைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
ஒரேதடவையில் இந்த வேலைகளைச் செய்து முடிக்க முடியாது. எனவே நாங்கள் இந்த வேலைகளைப் படிப்படியாகச் செய்து வருகின்றோம்.
இவ்வாறான விசேட தேவைகள் உள்ள பாடசாலைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நிதியை மாகாணவாரியாக ஒதுக்கிக்கொண்டுதான் இருக்கின்றோம் – என்றார்.