வைத்தியத்துறையில் நிலவும் பற்றாக்குறைகள் தொடர்பில் சத்தியலிங்கம் எம்.பி சுகாதார அமைச்சரிடம் கேள்வி..!
பாராளுமன்றத்தில் மருத்துவப் புனர்வாழ்வு சேவைகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், இலங்கையில் இயங்குகின்ற மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அலகுகளின் எண்ணிக்கை, அவை அமைந்துள்ள பிரதேசங்கள், அவற்றுக்கான வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பான விபரங்களை சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரிடம் கோரினார்.
குறிப்பாக, மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகளிலும் அலகுகளிலும் காணப்படும் தற்போதைய ஆளணியினர் நோயாளர்களுக்கு முழுமையான சேவைகளை வழங்குவதற்குப் போதுமானவர்களா என்றும், இல்லையெனில் நிலவும் வெற்றிடங்களுக்கான காரணங்கள் என்னவென்றும், அவற்றை நிரப்புவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள காலப்பகுதி எதுவென்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும், இவ்வைத்தியசாலைகள் மற்றும் அலகுகளில் செயற்கை அவயவங்களைத் தயாரித்தல், சக்கர நாற்காலிகளைத் தயாரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் உள்ளனவா என்றும், இப்பணிகளுக்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்றும், அவ்வாறாயின் ஒதுக்கப்பட்ட நிதியின் விபரங்கள் என்னவென்றும் கேட்டறிந்தார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (25.11.2026) இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போதே இவ்வாறு வினவினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இலங்கையில் ராகம, திகன மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் மூன்று மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைகள் இயங்கி வருவதாகவும், மேலும் ஐந்து மருத்துவப் புனர்வாழ்வு அலகுகள் ஏனைய வைத்தியசாலைகளில் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
ராகம மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு 2026ஆம் ஆண்டில் மருத்துவ மற்றும் சிகிச்சை உபகரணங்களுக்காக 182 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய புனர்வாழ்வு அலகுகள் அவை அமைந்துள்ள வைத்தியசாலைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்குவதால், அந்த வைத்தியசாலைகளுக்கான ஒதுக்கீடுகளிலிருந்தே அவற்றின் தேவைகளுக்கான நிதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தொழில் சிகிச்சையாளர்கள், உடற்பயிற்சி சிகிச்சையாளர்கள், பேச்சுப் பயிற்சி சிகிச்சையாளர்கள் மற்றும் செயற்கை அவயவங்கள் பொருத்துதல், திருத்துதல் தொடர்பான தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளிட்ட துறைகளில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொழில் சிகிச்சையாளர்களுக்கான ஆட்சேர்ப்பில் 43 பேருக்கு அனுமதி பெறப்பட்டு, 2025–2026 காலப்பகுதியில் 43 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் 63 பேரை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
உடற்பயிற்சி சிகிச்சையாளர்களைப் பொறுத்தவரையில் 257 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதுடன், 42 பேர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏனையவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பேச்சுப் பயிற்சி சிகிச்சையாளர்களில் 59 பேருக்கு அனுமதி கிடைத்த நிலையில், 58 பேர் ஏற்கனவே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய ஒருவரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். செயற்கை அவயவங்கள் பொருத்துதல் மற்றும் திருத்துதல் தொடர்பான பணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 11 பேரில் ஆறு பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
செயற்கை அவயவங்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதற்கான வசதிகள் ராகம மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலை, திகன மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களில் காணப்படுவதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
மேலும், 2025–2026ஆம் ஆண்டுகளுக்கான மத்தியகால வரவு செலவுத்திட்டக் கட்டமைப்பின் கீழ் ராகம மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சத்திரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட தேவைகளுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சத்தியலிங்கம் எம்.பி, நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாகவும், வடக்கு மாகாண சபையின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீடு வீடான தரவுச் சேகரிப்பின் அடிப்படையில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 75,000 ஊனக்குறைபாடுகள் ( disabilities) அடையாளம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தேவைகளைக் கருத்திற்கொண்டே மாங்குளம் மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலை உருவாக்கப்பட்டதாகவும், கடந்த காலங்களில் அதன் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளமையை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
எனினும், வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்ட வைத்தியசாலை, மாங்குளம் மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் செயற்கை அவயவங்களைத் தயாரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பான சேவைகள் காணப்பட்டாலும், அவற்றை முன்னெடுப்பதற்கான போதிய தொழில்நுட்ப ஆளணி இல்லாமை பாரிய பிரச்சினையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்கால ஆட்சேர்ப்பின்போது வடக்கு மாகாணத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கி, குறிப்பாக மாங்குளம் மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவப் புனர்வாழ்வு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாங்குளம் வைத்தியசாலைக்கு வருகை தருவதாகவும், அங்கு காணப்படும் வசதிகளை மேலும் மேம்படுத்துவதன் மூலம் அதனை இலங்கை முழுவதற்குமான ஒரு முக்கியமான தேசிய மருத்துவ வளமாக மாற்ற முடியும் என்றும் சத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
குறிப்பாக, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் நோயாளர்கள் மற்றும் படுக்கையில் இருந்து எழுந்து பயணிக்க முடியாத நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்கும் இறக்குவதற்கும் சாதாரண அம்புலன்ஸ் வண்டிகளைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, விசேட தேவையுடைய நோயாளர்களின் போக்குவரத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட விசேட அம்புலன்ஸ் வண்டியொன்றை 2027ஆம் ஆண்டிலாவது மாங்குளம் மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு வழங்க முடியுமா என அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், மாங்குளம் மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு அடுத்த வருடம் விசேட அம்புலன்ஸ் வண்டியொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


