உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உக்ரைனுடனான போரில் ப@லியான ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகின்றது

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
124 பார்வைகள்

யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போரில், 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை குறைந்தது 4 இலட்சத்து 90 ஆயிரத்து 334 ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசாங்கத்தின் புள்ளிவிபரத் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையான 1.1 கோடிக்கும் அதிகமான இறப்புப் பதிவுகளை சர்வதேச ரஷ்ய சேவை ஆய்வு செய்துள்ளது.

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சைபர் பார்ட்டிசன்ஸ் BY மற்றும் யுக்ரைனின் சைலண்ட் க்ரோ (Silent Crow) ஆகிய குழுக்களின் இணைய ஊடுருவலைத் தொடர்ந்து இந்தத் தரவுகள் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகளை ரஷ்யாவின் சுயாதீன ஊடகமான மீடியாசோனாவுடன் இணைந்து பிபிசி ஆய்வு செய்துள்ளது. இதன்போது, ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட ரஷ்ய இராணுவ உயிரிழப்புப் பதிவுகளில் 90 சதவீதமானவை கசிந்த தரவுகளுடன் பொருந்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் உயிரிழந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட ரஷ்யர்களில் 65 சதவீதமானோர் போரில் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் இந்த எண்ணிக்கை 59 சதவீதமாகக் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், யுக்ரைனின் 10 கிராமங்களைக் கைப்பற்றுவதற்காக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 20 ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த 10 கிராமங்களிலும் போருக்கு முன்னர் மொத்தமாக 12 ஆயிரம் மக்கள் வசித்துள்ளனர்.

அத்துடன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் பாக்முத் நகருக்கு தெற்கே அமைந்துள்ள அந்த்ரிவ்கா என்ற சிறிய கிராமத்தைக் கைப்பற்றுவதற்கான மோதலில் மாத்திரம் 1,122 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். போருக்கு முன்னர் அந்தக் கிராமத்தில் 74 பேர் மட்டுமே வசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் அமைந்துள்ள துவா, புரியாத்தியா உள்ளிட்ட வறிய பிராந்தியங்களைச் சேர்ந்த ஆண்கள், மொஸ்கோ மற்றும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 20 முதல் 25 மடங்கு அதிகமாகப் போரில் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சர்வதேச ஊடகங்கள் இணைந்து உறுதிப்படுத்திய ரஷ்ய இராணுவ உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரத்து 12 ஆகக் காணப்படுகின்றது.

எனினும், பகிரங்கமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இந்த எண்ணிக்கை, உண்மையான உயிரிழப்புகளில் 45 முதல் 55 சதவீதம் வரையானவற்றையே பிரதிபலிப்பதாக இராணுவ நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, ரஷ்ய இராணுவத்தின் உண்மையான உயிரிழப்புகள் 5 இலட்சத்து 27 ஆயிரத்து 295 முதல் 6 இலட்சத்து 44 ஆயிரத்து 471 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யுக்ரைன் தரப்பில் உயிரிழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருக்கலாம் என அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கடந்த 2026 ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

எனினும், திறந்தவெளித் தரவுகளின் அடிப்படையில் இயங்கும் UA Losses இணையத்தளத்தின் கணக்கீட்டின்படி, யுக்ரைன் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரத்து 952 ஆக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்யா தனது இராணுவ உயிரிழப்புகள் தொடர்பான உத்தியோகபூர்வமான முழுமையான புள்ளிவிபரங்களை இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீனாவின் விண்வெளிப் பயணத்தில் முதல் வெளிநாட்டவர்!

பாகிஸ்தானின் வான்படை விமானியான முஹம்மத் ஸீஷான் அலி, சீனாவின் தியாங்கொங் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ளார். ஷென்ஷோ-24 ஆளேற்ற…

114 0 0
உலக செய்திகள்

NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார்

NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தின் ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற…

109 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷிக்குத் திரும்பும் திகதியை உறுதிபடுத்தினார் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina), இந்தியாவில் தங்கியிருக்கும் தனது நாடுகடந்த நிலையிலிருந்து டிசம்பர் 16 அன்று தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக…

112 0 0
உலக செய்திகள்

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

புது டெல்லியில் திங்கட்கிழமை (23) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நேபாளப் பிரதமர் பாலென் ஷாவிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, செயற்கைக்கோள் தொழில்நுட்பம், நிர்வாகம், சுகாதாரம்,…

132 0 0