மூடநம்பிக்கை, சாதியப் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் சரோஜா!
மூடநம்பிக்கைகள், சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஏனைய தீங்கு விளைவிக்கும் சமூக நடைமுறைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, முன்மொழியப்பட்டுள்ள சமூக ஒழுக்கவியல் கட்டமைப்பின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளில் சாதியை அடையாளப்படுத்தி, பாகுபாடான மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
மந்திர தந்திரங்கள், வசியம் மற்றும் ஏனைய மாந்திரீக நடைமுறைகள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் பல விளம்பரங்கள் ஆண்களையும் பெண்களையும் தவறாக வழிநடத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு வகையான எண்ணெய்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விளம்பரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், ‘இவை சமூகம் மற்றும் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்களைத் தவறாக வழிநடத்தி, சிதைக்கும் மிகத் தாழ்ந்த மட்டத்திலான விளம்பரங்களாகும்” எனக் குறிப்பிட்டார்.


