யாழில் பயணிகளை நடுத்தெருவில் அந்தரிக்க விட்ட இ.போ.ச பேருந்து.!
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று மக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பேருந்து இன்று காலை 7.15 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றியவாறு மன்னார் நோக்கி புறப்பட்டது. இதன்போது தனங்கிளப்பு பகுதியில் பேருந்து பழுதடைந்துள்ளது.
பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த பகுதியால் வந்த பேருந்தில் ஒருதொகை பயணிகள் ஏறி பயணத்தை தொடர்ந்தனர். அந்த பேருந்தில் ஏற்கனவே பயணிகள் இருந்த காரணத்தால், பழுதடைந்த பேருந்தில் வந்த பயணிகள் முழுமையாக அந்த பேருந்தில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அந்த பயணிகள் நடு வீதியில் நின்று அந்தரித்துள்ளனர். பழுதடைந்த பேருந்தின் சாரதியோ அல்லது நடத்துனரோ வேறொரு பேருந்தை ஏற்பாடு கூட செய்யவில்லை என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேருந்து பிரச்சினை காரணமாக வேலைகளுக்கு செல்வோர் உட்பட பல்வேறு தேவை நிமித்தம் பயணம் செய்தவர்கள் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் பழைய பேருந்துகள் பல போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவை உரிய முறையில் சீர்செய்யப்படாமல் காணப்படுவதால் இவ்வாறான பிரச்சினைகள் பெரும்பாலான இடங்களில் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சீர்செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.




