மாகாண அதிகாரங்களைப் பறிக்க வேண்டாம் – நாடாளுமன்றத்தில் சத்தியலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்…!
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுகாதாரத் தேவைகளுக்கு விசேட நிதி ஒதுக்கீடு அவசியம் எனவும் மாகாண வைத்தியசாலைகளின் அதிகாரங்களைப் பறிக்க வேண்டாம் எனவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் (25.11.2026) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கார்த்திகை மாதம் இலங்கை மக்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு மாதமாகும். குறிப்பாக, இந்த வாரம் தமது நம்பிக்கைகளுக்காகவும், உயரிய இலட்சியங்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வாரமாகும்.
தங்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்து, தமது உயிரையும் துச்சமாக மதித்து, உயரிய நோக்கத்திற்காகத் தங்களுடைய இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வாரமாக இது அமைந்துள்ளது.
தமது பிள்ளைகளை, கணவனை, மனைவியை, சகோதரர்களை, உறவினர்களை மற்றும் நண்பர்களை இழந்த குடும்பங்களுடன் நானும் ஒருவனாக இணைந்து, கனத்த இதயத்துடன் அவர்களை நினைவுகூருகின்றேன்.
அதேபோன்று, கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இன்று பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகவும் நினைவுகூரப்படுகின்றது.
இந்த ஆண்டின் கருப்பொருளாகப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மாத்திரமல்லாமல், கருவிலேயே இருக்கின்ற பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் எமது நாட்டில் இடம்பெறுகின்றன.
எனவே, பெண்கள், சிறுமிகள் மற்றும் கருவிலுள்ள பெண் சிசுக்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நாளாக இன்றைய தினத்தை நாம் கருத வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் சுகாதாரத் தேவைகள் தொடர்பாகவும் எனது கருத்துக்களை இச்சபையில் முன்வைக்க விரும்புகின்றேன்.
சுகாதாரம் என்பது அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் சலுகை அல்ல; அது ஒவ்வொரு குடிமகனுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகும். ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தியை அளவிடுவதில் சுகாதாரக் குறிகாட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால் வடக்கு மாகாண மக்களின் சுகாதாரத் தேவைகள் வெறுமனே தேசிய சராசரிப் புள்ளிவிபரங்களுக்குள் மறைக்கப்படக்கூடாது.
எனவே, கிராமம், நகரம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் சமமானதும் தரமானதுமான சுகாதார சேவை கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, நீண்டகால யுத்தத்தினால் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்காக சுமார் 710 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டெழும் செலவுகளுக்கு 578.8 பில்லியன் ரூபாவும், மூலதனச் செலவுகளுக்கு 130.8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகளை வரவேற்கின்றேன்.
மாகாணத்திற்கு விசேட அபிவிருத்தி நிதி ( PSDG) அளவை கூட்டுங்கள், அந்நிதியினூடாக பல மாகாணத்தின் முன்னுரிமை வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு புலம்பெயர் உறவுகளின் அபிவிருத்திக்கான நிதி உதவிகள் கிடைக்கும், அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அமெரிக்காவில் வசிக்கும் வேலணையை சொந்த இடமாகக் கொண்ட நன்கொடையாளரின் அமைப்பு சத்திரசிகிச்சை கூடம் கட்டுவதற்கு 700,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக தர முன்வந்துள்ளார்.
இது ஒரு முன்னுரிமை வழங்க வேண்டிய திட்டமில்லை எனக்கூறி தேசிய திட்டமிடல் தினைக்களம் (Department of National Planning) நிராகரித்துவிட்டதாக அறிகிறேன். கெளரவ அமைச்சர் அவர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு அந்த நன்கொடையை பயன்படுத்த உதவவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .
இங்கு நான் வலியுறுத்த விரும்புவது நிதி ஒதுக்கீட்டின் அளவை மாத்திரமல்ல; ஒதுக்கப்பட்ட நிதி உரிய காலத்தில் முழுமையாகவும் வினைத்திறனாகவும் செலவிடப்படுகின்றதா என்பதையே.
2024ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன நிதி 60,500 மில்லியன் ரூபாவில் 34,206 மில்லியன் (56.5%) ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன நிதி 95,500 மில்லியன் ரூபாவில் 52,306 மில்லியன் ரூபா (54.5%)மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை, 106,074 மூலதன நிதி மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 13,428 மில்லியன் ரூபா (12.6%) மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய வேண்டும்.
நிதி ஒதுக்கப்பட்டும் தேவையான அபிவிருத்திப் பணிகள் ஏன் தாமதமடைகின்றன? ஆளணிப் பற்றாக்குறையா? நிர்வாகத் தடைகளா? அல்லது திட்டமிடலில் உள்ள குறைபாடுகளா?
காரணத்தைக் கண்டறிந்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தாதியர் சங்கம் உட்பட சுகாதாரப்பணியாளர்கள் தமது பல்வேறுபட்ட பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி வீதியில் இறங்கியுள்ளார்கள்.
நேற்றயதினம் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது கோரிக்கைகள் தொடர்பாக பேச கடந்த 4 மாதங்களாக எடுத்த முயற்சி கைகூடவில்லை என தெரிவித்துள்ளது.
எனவே சுமூகமாக தீர்வொன்றைப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
தரமான சுகாதார சேவையை வழங்குவதில் மிகப்பெரிய தடையாக இருப்பது ஆளணிப் பற்றாக்குறையாகும். 2026ஆம் ஆண்டுக்கான அரச துறையின் ஆளணி அறிக்கையின்படி, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 100,696 ஆகும். ஆனால் பணியில் இருப்பவர்கள் 81,727 பேர் மாத்திரமே. அதாவது 18,969 (18%) வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
வடக்கு மாகாணத்தில் 8353 அனுமதிக்கப்பட்ட ஆளணியாக உள்ளபோதும் 6531 உள்ளனர்.
அதாவது 1822 (22% )வெற்றிடங்கள் காணப்படுகின்றன. முக்கிய சில உதாரணங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
மருந்துக்கலவையாளர்கள் (Dispensers) 189 பேர் இருக்கவேண்டியதில் 97 பேர் பணியாற்றுகிறார்கள்.
உயிரியல் மருத்துவ பிரிவில் 27 பேரில் 13 பேரே பணியாற்றுகிறார்கள்
தாதியர் சேவையில், அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 1148, பணிசெய்வோர் 1069, வெற்றிடம் 79.
மருந்தாளர்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 98, பணிசெய்வோர் 76, வெற்றிடம் 22.
பொதுசுகாதார தாதிய உத்தியோகத்தர்கள் (PHNS), அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 31, பணிசெய்வோர் 03, வெற்றிடம் 28.
விசேட வைத்திய நிபுணர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 164, பணிசெய்வோர் 49, வெற்றிடம் 115, ஆனால் 88 விசேட வைத்தியர்கள் பணிசெய்கிறார்கள்.
இவ்வாறான சூளலில் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வளங்குவதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.
அரசாங்கம் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை வரவேற்கின்றேன். ஆனால், அந்த ஆளணிகள் எந்த மாவட்டங்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதே முக்கியமான கேள்வியாகும்.
அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு 178 தாதியர்கள் நியமிக்கப்பட்டபோதும், அவர்களுக்குப் பதிலாக 174 தாதியர்களை விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதனால் எமக்குக் கிடைக்கும் உண்மையான மேலதிக ஆளணி நான்கு தாதியர்கள் மாத்திரமே.
இவ்வாறான ஆட்சேர்ப்புகளால் எமது மாகாணத்தின் உண்மையான தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும்?
கெளரவ அமைச்சர் அவர்களிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைக்கிறேன்.
மருந்துக்கலவையாளர்கள் வெற்றிடத்தை குறிப்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக உள்ளீர்க்கப்பட்டு பயிற்சி முடித்து வெளியேறியவர்களுக்கு ஓரிரு நாட்களில் நியமனம் வழங்கவிருப்பதாக அறியமுடிகிறது. அவர்களில் கனிசமானவர்களை வடக்கு மாகாணத்திற்கு பெற்றுத்தருமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன்.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மனநல மருத்துவர்களுக்கான பற்றாக்குறைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
ஆளணி முகாமைத்துவத்தில் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் (MSD) பங்களிப்பு முக்கியமானது. எவ்வளவிற்கு வினைத்திறனாக அத்திணைக்களம் செயற்படுகிறது என்பது மிகமுக்கிய கேள்வியாகும்.
கெளரவ அமைச்சர் அவர்களே பின்வரும் வைத்தியசாலைகள்மீது விசேட கவனம் செலுத்துங்கள்.
முருங்கன் ஆதார வைத்தியசாலை,
இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டாலும் ஆளனிப்பற்றாக்குறை மற்றும் ஏனைய பெளதீக வளங்களை மேம்படுத்த வேண்டும், இவ்வைத்தியசாலை பரந்த ஒரு நிலப்பரப்பை கையாளும் வைத்தியசாலையாக உள்ளது.
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலை பல்வேறு வளப்பறாக்குறைகளுடன் இயங்கும் மருத்துவமனை, வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு அடுத்த நிலையில் உள்ளது. அனால் அங்கு சிறப்பான சேவையை மக்கள் பெறமுடியாதுள்ளது.
எனவே கெளரவ அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு அங்கு வாழும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முன்வரவேண்டும்.
முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் பல வளப்பற்றாக்குறைகள் இருப்பதை இந்த சபைக்கு தெரியப்படுத்துகிறேன்.
குறிப்பாக அங்கு உள்ளக பயிற்சி வைத்தியர்களுக்கான தங்குமிட வசதி இன்மையை நிவர்த்திசெய்ய அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, மாவட்ட ரீதியான தேவைகளைக் கணக்கிட்டு ஆளணிகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 190.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன்.
ஆனால், வடக்கு மாகாணத்தின் பல மாவட்ட வைத்தியசாலைகளில் இன்னும் அடிப்படை மருத்துவ உபகரணங்கள், ஆய்வுகூட வசதிகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் விசேட மருத்துவ சேவைகள் போதுமான அளவில் இல்லை.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழும் மக்கள் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்காக வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் பொருளாதாரச் சுமையும், காலதாமதமும் ஏற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் நோயாளிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது.
எனவே, மாவட்டங்களின் நோயாளர் எண்ணிக்கை, புவியியல் அமைவு மற்றும் மருத்துவத் தேவைகளின் அடிப்படையில் நவீன மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும்.
அதேவேளை, அவற்றைப் பராமரிப்பதற்கும் பழுதடைந்த உபகரணங்களைத் திருத்துவதற்கும் தேவையான உயிரியல் மருத்துவப் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களையும் நியமிக்க வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
இந்த வரவு–செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான முன்மொழிவுகளில் ஒன்று மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதாகும்.
இந்த முன்மொழிவு தொடர்பில் எமது கடுமையான எதிர்ப்பையும் கவலையையும் பதிவு செய்கின்றேன்.
இது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கையாக அமையும். தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். எனவே, பகிரப்பட்ட அதிகாரங்களைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்தால் மாத்திரம் சுகாதார சேவையின் தரம் உயர்ந்துவிடுமா? நிச்சயமாக இல்லை.
ஏற்கனவே மத்திய அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலைகளிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அப்படியிருக்கும்போது நிர்வாகத்தை மாற்றுவதால் மட்டும் என்ன மாற்றம் ஏற்படப்போகின்றது?
மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆளணி, பயிற்சிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வழங்குங்கள்.
மாகாண சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துங்கள். மக்களுக்குத் தரமான சேவையை வழங்க முடியும்.
கடந்த காலங்களில் மாகாண சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு ஒத்துழைத்த முன்னாள் சுகாதார அமைச்சர்களான கௌரவ மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனவே, மாகாண வைத்தியசாலைகளின் நிர்வாக அதிகாரங்களைப் பாதுகாத்து, அவற்றுக்குத் தேவையான வளங்களை வழங்குவதே சரியான தீர்வாகும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
நான் வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், போரினால் அழிக்கப்பட்டிருந்த மாகாணத்தில் பல்வேறு சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம். அவற்றில் ஒரு சிலவற்றை இச்சபையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
எமது மாகாணத்திற்கென ஒரு விரிவான சுகாதார மூலோபாயத் திட்டத்தை உருவாக்கினோம். அதில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து 117 விசேட நிபுணர்கள் பங்குபற்றினார்கள்.
வடக்கு மாகாணத்தில் 27 புதிய வைத்தியசாலைகளை அமைத்தோம். மீள்குடியேறும் மக்களுக்கு வைத்திய சேவையை வழங்குவது எமது இலக்காக அமைந்தது.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த மக்களுக்குச் சிகிச்சையும் புனர்வாழ்வும் வழங்குவதற்காக ‘வைகறை’ மருத்துவப் புனர்வாழ்வு நிலையத்தை உருவாக்கினோம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்கினோம்.
அவர்களுக்கான மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகைத் திட்டத்தையும் ஆரம்பித்தோம்.
இலங்கையின் முதலாவது இலவச நோயாளர் காவுவண்டிச் சேவையை ஆரம்பித்தோம்.
நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் நவீன சத்திரசிகிச்சை மற்றும் விபத்துச் சேவைப் பிரிவுகளை உருவாக்கினோம்.
கிளிநொச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விசேட மருத்துவப் பிரிவையும், வவுனியாவில் இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சைப் பிரிவுகளையும், மாங்குளத்தில் மருத்துவப் புனர்வாழ்வு வைத்தியசாலையையும் உருவாக்கினோம்.
யுத்த காலத்தில் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்குச் சேவையாற்றிய 1,000 சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனங்களையும் வழங்கினோம்.
வடக்கு மாகாணசபை இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், அதற்கிருந்த நிதி, அதிகார மற்றும் நிர்வாகத் தடைகளையும் மறந்துவிடக்கூடாது.
எனவே, எமது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது எங்கள் அனைவருக்குமான நாடு. எதிர்காலச் சந்ததியினருக்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எங்களுக்கும் நீண்டகால அனுபவம் இருக்கின்றது. எமது ஆலோசனைகள் நல்லவையாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சுகாதாரக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் இணைத்துக்கொள்ளுங்கள். ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது ஆரோக்கியமான ஜனநாயக அணுகுமுறையல்ல.
2027 முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1,000 ஆரோக்கிய நிலையங்களை அமைப்பதற்காக 17,440 மில்லியன் ரூபா ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன். ஆனால், ஏற்கனவே ஆளணிப் பற்றாக்குறை நிலவும் நிலையில் புதிய நிலையங்களுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களை எவ்வாறு நியமிக்கப்போகின்றீர்கள் என்பதற்கான தெளிவான திட்டம் அவசியமாகும்.
அதேபோன்று, தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 11.2 பில்லியன் ரூபாவும் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களின் ஊட்டச்சத்துத் தேவைகளுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உதவி, குழந்தைகளின் போஷாக்கு, பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இரத்தச்சோகை தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவக் கட்டமைப்பின் ஊடாகவும் போஷாக்கின்மையைத் தடுப்பதற்கான ஆய்வுகளையும் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தின் சுகாதாரப் பிரச்சினைகளைப் பேசும்போது மனநலச் சேவைகளைப் புறக்கணிக்க முடியாது. நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு மனநலப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல மருத்துவ நிபுணர்கள், உளநல ஆலோசகர்கள், மனநல மருத்துவ அதிகாரிகள், உளநல சமூக சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். உளநலச் சேவைகளை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
நீண்டகால யுத்தத்தினாலும் வேறு காரணங்களாலும் வடக்கு மாகாணத்தில் விசேடதேவைக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாகும்.
வடக்குமாகாண சுகாதார அமைச்சு 2015ம் ஆண்டில் வீடுவீடாக சென்று இவ்விடயம் தொடர்பாக தகவல் சேகரிக்கும் பணியை செய்தது.
அதன்போது 75,000 வரையான அங்கவீனம் (Disabilities) அடையாளப்படுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும்.
எனவே நாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புனர்வாழ்வு பிரிவொன்றை அமைத்தோம். அப்பிரிவு பல வசதிகளை கொண்டது, அப்பிரிவு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் முழுநாடும் பயன்பெறலாம்.
அதற்கு தேவையான ஆளணி முழுமைப்படுத்தப்பட வேண்டும்.
ஊடக துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இதுவரையில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி தொகுதியினராக அங்கீகரிக்கப்பட்டவில்லை.
இதனால் அவர்களால் இலகு வங்கிக்கடன்களை கூட பெறமுடியாதவர்களாக உள்ளனர்.
அதுமட்டுமல்ல பல ஊடகவியலாளர்களின் அடிப்படை சம்பளம் ரூபா 30,000 ற்கு குறைவாகவே உள்ளது. எனவே அமைச்சர் அவர்கள் இவ்விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


