பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!
வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், சட்டப் பாதுகாப்பில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம் உள்ளிட்ட ஆணையாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தின் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கலந்தாய்வுக் கூட்டம் இன்று (25.11.2026) புதன்கிழமை காலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
தொடக்கவுரையாற்றிய ஆளுநர், பெண்கள் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் வளர்ச்சியில் இன்றியமையாத பங்காற்றுகின்ற போதிலும், அவர்களுக்கான சமவாய்ப்புகளை உறுதிப்படுத்துதல், பாகுபாடு மற்றும் வன்முறைகளைத் தடுத்தல், பொருளாதாரச் சுதந்திரத்தை ஊக்குவித்தல், தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகத்தை நிறுவுவதற்கான முயற்சியை வரவேற்ற ஆளுநர், அது ஏற்கனவே செயற்படும் நிறுவனங்களின் பணிகளை மீளச் செய்வதாக அமையாமல், அவற்றுடன் இணைந்து செயற்படும் ஒருங்கிணைப்புப் பாலமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக, கிராமப்புறங்களிலும் சமூக ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலும் வாழும் பெண்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான சேவைகள் மற்றும் முறைப்பாட்டு நடவடிக்கைகளை இலகுவாகப் பெற்றுக்கொடுப்பதில் அந்த அலுவலகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மாகாண அலுவலகத்தை நிறுவுவதற்குத் தேவையான நிர்வாக, சட்ட மற்றும் ஏனைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
தலைமையுரையாற்றிய தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம், வடக்கு மாகாணத்தில் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு வடிவமைக்க வேண்டும், இம்மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் எவை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் பொறிமுறைகளால் தீர்க்கப்படாமல் எஞ்சியுள்ள பிரச்சினைகள் எவை என்பவற்றை நேரடியாக அறிந்துகொள்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பும் கண்ணியமும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய சூழல்கள்
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துர்நடத்தைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மருத்துவமனைகளில் பொதுவான விடுதிகளில் சிகிச்சை பெறும்போது, ஏனைய நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவர்களின் அடையாளம் வெளிப்படும் நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இது பாதிக்கப்பட்ட பெண்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பாரதூரமான பிரச்சினையாக உள்ளதால், அவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட சிகிச்சைச் சூழலை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் மாணவிகள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களால் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் வழங்குவதற்கும் தற்போதுள்ள பொறிமுறைகள் போதிய வலிமையுடன் இல்லை என்ற கவலையும் முன்வைக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், இணையவழிக் குற்றங்களால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றமை மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
வடக்கு மாகாணத்தின் பல பொலிஸ் நிலையங்களில் தமிழ்மொழியில் சேவையாற்றக்கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுவதால், பெண்கள் தமது முறைப்பாடுகளைத் தயக்கமின்றி முன்வைப்பதிலும் உரிய உதவியைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
சுகாதாரக் கொள்கைகளிலும் பெண்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் கண்ணியம் உறுதிப்படுத்தப்படும் வகையில் மேம்பாடுகள் தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
குடும்பம், காணி உரிமை மற்றும் சட்டப் பாதுகாப்பில் நிலவும் சிக்கல்கள்
வடக்கு மாகாணத்தில் அரச காணிகள் குடும்பத் தலைவரான ஆணின் பெயரில் வழங்கப்படும் நடைமுறையால், விவாகரத்து உள்ளிட்ட குடும்பப் பிரிவினைச் சூழல்களில் பெண்கள் காணி உரிமை மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று, குடும்ப அட்டைகளில் ஆணின் பெயர் குடும்பத் தலைவராகப் பதிவு செய்யப்படுவதால், நிவாரணங்கள் உள்ளிட்ட அரச உதவிகளைப் பெறுவதிலும் பெண்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
தேச வழமைச் சட்டத்தின் கீழ் பெண்களின் சொத்துரிமை மற்றும் உரிமைகளைப் பாதிக்கும் ஏற்பாடுகள் தொடர்பிலும் சட்ட ரீதியான மீளாய்வு தேவைப்படுவதாகக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்புணர்வுச் சட்டப் பாதுகாப்புக்கும், 18 வயதுக்குக் குறையாத திருமண வயது தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்கும் இடையில் 16 – 17 வயதுடைய சிறுமிகள் எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு இடைவெளிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குப் போதிய சட்டப் பாதுகாப்பும் நீதியைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண் பிள்ளைகள் என்ற தகவலும் முன்வைக்கப்பட்டது. இது பெண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் குடும்ப மற்றும் சமூகப் பாதுகாப்புச் சவால்கள் குறித்து ஆழமாக ஆராய வேண்டிய தேவையை உணர்த்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு, மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் குடும்பங்கள் சீரழிவதுடன், ஒரே குற்றங்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் நபர்களின் செயற்பாடுகளால் பெண்கள் மற்றும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் அதிகாரங்களும் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளும்
இக்கலந்துரையாடலில், 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
பெண்களின் உரிமை மீறல்கள், பாகுபாடுகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்துதல், தேவையான பரிந்துரைகளை முன்வைத்தல், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்குதல் ஆகியவை ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்புகளாகும்.
அரச நிறுவனங்கள் மாத்திரமன்றி, தனியார் நிறுவனங்கள், தனியார் தொழில் வழங்குநர்கள் மற்றும் தனிநபர்களால் ஏற்படும் பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளையும் விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் விளக்கப்பட்டது.
கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை உள்வாங்கிக்கொள்வதாகத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவியும் ஆணையாளர்களும், ஆணைக்குழுவின் சட்ட வரையறை மற்றும் அதிகாரங்களுக்கு உட்பட்ட விடயங்களில் உரிய கவனம் செலுத்தி, தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதாகக் குறிப்பிட்டனர்.
பொருத்தமான சட்டத் திருத்தங்களுக்கான பரிந்துரைகள், நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஆதரவுச் சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களிலும் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தனர்.
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகம் நிறுவப்படுவதன் மூலம் பெண்கள் தமது முறைப்பாடுகளை இலகுவாக முன்வைக்கவும், கிராமிய மட்டத்தில் அவர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு உரிய நிறுவனங்களுக்குக் கொண்டுசெல்லவும், விழிப்புணர்வு மற்றும் ஆதரவுச் சேவைகளை ஒருங்கிணைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம், ஆணையாளர்களான ஷரின் ஷரூர், ஜனகா செல்வராஜ், ஜயந்தி குருதும்பால, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், மன்னார் மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட உதவிச் செயலாளர், சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர், பொலிஸ் அதிகாரிகள், சமுர்த்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், அனர்த்த முகாமைத்துவத் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.








