சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாக்கியத்துக்கு எமது அரசு உயிரூட்டும்! : ஜனாதிபதி அநுர உறுதி!
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கோட்பாட்டுக்கு உண்மையான வடிவம் கொடுத்து உயிரூட்டும் வேலைத்திட்டங்களை எமது அரசு உறுதியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய மாநாட்டில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு முதன்மை உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அந்த மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
“கடந்த காலங்களில் சட்டத்தின் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துபோயிருந்த சமூகத்தில், சட்டம் தொடர்பான வலுவான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பி, சட்டம் குறித்த பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வோம்.
எமது அரசு முன்னெடுக்கும் கொள்கைகள் எதிர்க்கட்சியினரின் குறுகிய அரசியல் இலாபங்களைப் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கின்றது. இதன் காரணமாகவே, அவர்கள் இவ்வாறான சூழ்ச்சிகளைச் செய்து மக்கள் மத்தியில் வேண்டாத சர்ச்சைகளை உருவாக்கி, ஆட்சியைக் கவிழ்க்க முற்படுகின்றனர்.” – என்றார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் குறித்துப் பதிலளித்த ஜனாதிபதி,
“ரூவன்வெலிசாய விகாரையை எமது அரசு நீரில் மூழ்கடிப்பதாகச் சிலர் பரப்பி வரும் போலிப் பிரசாரங்கள் அவர்களின் அரசியல் இயலாமையையே காட்டுகின்றன.
மண்ணால் செய்யப்பட்ட சூனிய பொம்மைகளைச் செய்து அதில் முட்களைக் குத்தினால், அது எனது உடம்பில் முட்களைக் குத்துவது போன்றது என அவர்கள் எண்ணிச் செயற்படுகின்றார்கள். மறுபுறம் பாம்புக் கோலைச் சுமந்து செல்வது என அவர்களின் மனநிலை மிக விசித்திரமாக உள்ளது.
இவர்களின் இத்தகைய பிற்போக்குத்தனமான செயற்பாடுகள், இவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் எவ்வாறான அராஜக நிலையை ஏற்படுத்துவார்கள் என்ற நியாயமான சந்தேகத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.” – என்றார்.










