மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.!
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், தேர்தல் முறைமையில் மாற்றங்களைச் செய்வதற்காகத் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற அமர்வு நடைபெற்ற வாரத்தில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி M A. சுமந்திரன் முன்னிலையாகி கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு எனத் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முறைமையில் மாற்றங்கள் அவசியமானால், முதலில் தேர்தலை நடத்திவிட்டு, அடுத்த தேர்தலுக்கு முன்னர் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடியும் எனச் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், புதிய தொகுதிகள் அல்லது தேர்தல் வட்டாரங்களை உருவாக்கி எல்லை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகள் நீண்டகாலம் எடுக்கக்கூடும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சட்ட மாற்றங்களின் போதும் ஏற்கனவே இருந்த தேர்தல் தொகுதிகள் மற்றும் வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலையும் தாமதமின்றி நடத்துவதற்கான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்தலை நடத்துவதற்கு உதவும் வகையில், தனிநபர் சட்டமூலங்கள் தொடர்பான தனது முன்முயற்சிகள் மற்றும் முந்தைய நாடாளுமன்றங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும் சுமந்திரன் தெரிவுக்குழுவில் முன்வைத்துள்ளார்.
தனிநபர் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை
நடத்துவதற்கான வழியை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான திருத்தங்களைப் பின்னர் பரிசீலிக்கலாம். ஆனால், அவற்றைக் காரணமாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைக்கக் கூடாது என்பதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடாகும்.










