யாழில் அடித்தே கொ@லை செய்யப்பட்ட வயோதிபப் பெண் – மகன் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்றையதினம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேலு விஜயலட்சுமி (வயது 74) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக இருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சடலத்தில் அடி காயங்கள் இருப்பதனையும், வீட்டில் பொருட்கள் வீசப்பட்டு இருப்பதனையும் அவதானித்தார்.
அதன்பின்னர் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சென்று இடத்தினை பார்வையிட்டார்.
சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதால் சடலத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின் மூலம் அது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டது.
குறித்த பெண்ணும் அவரது மகனுமே வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மகனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல இலட்சம் ரூபா பணத்தினை வீதியில் வீசியதுடன், பல இலட்சம் ரூபா பணத்தினை சேதப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.