விவசாய காணிகளை ஆக்கிரமித்த வனவள திணைக்களம்; சுமந்திரன், சத்தியலிங்கம் நேரில் ஆய்வு.!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் பகுதியின் முத்துமாரிநகர் கிராமத்தில் மக்களின் விவசாய காணிகளை ஆக்கிரமித்து வனவள திணைக்களம் எல்லைக்கற்களிட்டுள்ளனர்.
இச்செயற்பாடு தொடர்பில் அப்பகுதி மக்களின் முறைப்பாட்டினையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் நேற்று (15.09.2026) நேரடியாக குறித்த பகுதிக்கு விஜயம் செய்து எல்லைக்கற்களிடப்பட்டுள்ள காணிகளை பார்வையிட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடியிருந்தனர்.
இவ்விடயத்தினை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வினை பெற்றுத்தர தாம் முழுமையான முயற்சி எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் இப்பகுதியை அண்மித்த பழையவாடி பகுதியில் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் விவசாயக்காணிகள் பல விடுவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இந்த விடயம் உள்ளிட்ட வனவள திணைக்களத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக தாம் அறிந்துள்ளதாகவும் சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் சுமந்திரன் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இந்த விஜயத்தில் பிரதேசசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் தனுசன், செல்வராசா சுசீலன், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், இணைப்பாளர் த.தவேந்திரராசா உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.


