சிறப்பான சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் விசேட நிகழ்வு.!
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க தலைமையில், நுவரெலியா பொலிஸ் பிரிவில் சிறப்பான சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (06) பிற்பகல் 3.00 மணிக்கு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் “ஆச்சரிய” கேட்போர் கூடத்தில் கௌரவமான முறையில் நடைபெற்றது.
நுவரெலியா பொலிஸ் பிரிவை உள்ளடக்கிய வகையில் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தமது கடமைகளை நிறைவேற்றும் போது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, தொழில்முறைத் தன்மை மற்றும் சேவைப் பங்களிப்பு ஆகியவை பாராட்டப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, பொலிஸ் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக அதிகாரிகள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் சேவைக்கான நேர்மையான பங்களிப்பை பாராட்டினார்.
மேலும், இவ்வாறான சிறப்பான சேவைகளை கௌரவிப்பதன் மூலம் அதிகாரிகளின் தொழில் உற்சாகமும், பொதுமக்களின் நம்பிக்கையும் மேலும் வலுப்பெறும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி துஷாரி தென்னகோன், நுவரெலியா மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ. ஜி. ஜே. சந்திரகுமார, நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. எம். சமரகோன் பண்டா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க, நுவரெலியா பிரதேச செயலாளர் லஹிரு களுகம்பிட்டிய, நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் சார்மிந்த சஞ்சீவ உள்ளிட்ட நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள், பொலிஸ் குழு தலைவர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது, தமது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி குறிப்பிடத்தக்க சேவையை வழங்கிய கான்ஸ்டபிள் தரத்திலிருந்து பிரதான பொலிஸ் பரிசோதகர் தரம் வரையிலான 22 பொலிஸ் அதிகாரிகளுக்கு நிதி ஊக்குவிப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிதி பரிசுகள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் ஏனைய அழைக்கப்பட்ட அதிதிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கரங்களினால் வழங்கப்பட்டன.


