மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி தவசிதேவர் ஐயாத்துரை காலமானார்.
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி, ஆய்வாளர் , எழுத்தாளர் தவசிதேவர் ஐயாத்துரை இன்று காலமானார்.
மாத்தளை ரோகிணி என்ற பெயரில் எழுத்தாளராக அறியப்பட்டவர்.
கம்பளை புசத்தன எனும் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட அய்யாத்துரை தோட்டத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவரும் மறைந்த வி.கே வெள்ளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகி புதிய தொழிற் சங்கம் ஒன்றை தொழிலாளர் தேசிய சங்கத்தை ஆரம்பித்த பிறகு அவருடன் இணைந்து தொழிற்சங்க வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதற்கு முன்பதாக திராவிட கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதன் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். வெள்ளையனின் இறப்புக்கு பிறகு கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.
(1971) தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொள்கையின் படி தோட்டத் தொழிலாளி ஒருவரே சங்கத்தின் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் தெரிவு செய்யப்பட்டார்.
அவரது படைப்புகளில் ‘உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்’ (1993) என்ற தொகுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பூங்கோதை புயலானாள், வந்த துன்பம் போதும், அவனுக்கு அவள் துணை ஆகிய தொடர் கதைகளைத் எழுதியிருக்கிறார்.
1997இல் இதயத்தில் இணைந்த இரு மலர்கள் என்ற நாவலை படைத்தார்.
1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன்பதாக 1977ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மஸ்கெலியா மூன்று அங்கத்தவர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு அந்தத் தேர்தலில், நான்காவது இடத்தைப் பிடித்தமை முக்கிய விடயம்.
அரசியலிலும் தொழிற்சங்கத்திலும் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த மலையக பிரமுகர்கள் ஒரு சிலரில் ஐயாத்துரையின் பெயர் நிச்சயம் இடம்பெறும்.