தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது.!
தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் ஊடுருவிய இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு இன்று(24) அதிகாலை இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்து இறங்கியதாக இராமேஸ்வரம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இராமேஸ்வரம் மரைன் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில் மரைன் பொலிஸார் அங்கு சென்று பார்த்த போது இலங்கையை சேர்ந்த இருவர் வந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த மரைன் பொலிஸார் இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரைன் பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இலங்கை வட்டாலை பகுதியைச் சேர்ந்த லூஸிநந்த் (30) மற்றும் ஹம்பகா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (31) ஆகிய இருவர் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து 3 இலட்சம் பணம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு இன்று (24) அதிகாலை சுமார் 4 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் சென்று இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும் மெத்தபெட்டமன், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல நிலுவையில் உள்ளதுடன், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்டவிரோதமாக மறைந்திருக்கலாம் என்பதற்காக இங்கு வந்திருக்கலாம் என தெரியவந்ததன் அடிப்படையில் தொடர்ந்து இருவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை மற்றும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையர்கள் இருவர் மீதும் மரைன் பொலிஸார் சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு இன்றி தமிழகத்திற்கு ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைப்பதற்கு வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில் கியூ பிரிவு பொலிஸார் இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கை நிலுவையில் உள்ளதால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என தெரிவித்ததால் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் கடற்கரைப் பகுதியில் நேற்று தொடங்கிய சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்று (24) மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள இருவர் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவிய சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.