உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அநுர அரசை நம்பி ஏமாந்துவிட்டோம்; எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

“எங்கள் பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்து, அவரது அரசை நம்பி நாங்கள் முற்றாக ஏமாந்து போயுள்ளோம். எனவே, எங்களது சொந்த நிலங்களை எங்களிடமே மீட்டுத் தாருங்கள்” என்று வலிகாமம் வடக்கு, பலாலி பகுதி மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை, எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் சென்று சந்தித்தபோதே மக்கள் இந்த ஆதங்கத்தை வெளியிட்டனர்.

அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
“எமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி நாங்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். இவ்வாறான நிலைமையில், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக வந்து அவரது ஆட்சி அமைந்தால் எமது காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அவருக்குப் பெருமளவில் ஆதரவையும் வழங்கியிருந்தோம்.

நாங்கள் எதிர்பார்த்தது போன்றே அவரது தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர்களும் எங்களது காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறி வந்தனர். ஆனால், இன்றுவரை எமது காணிகள் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலேயே தொடர்ந்து நீடிக்கின்றன. இப்படியாக அநுரகுமாரவை நம்பி நாங்கள் ஏமாந்து போயுள்ளோம். கடந்த காலங்களில் எங்களது வீதியால் நடந்து திரிந்த ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எங்களது காணிகளில் இப்போதும் இராணுவம் இருப்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அதனை எங்களிடம் வழங்க ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்றார்?

இன்றைக்கு எங்கள் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, அமைதியான முறையில் போராட்டத்தில் கூட ஈடுபட முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமையிலேயே நாங்கள் இருக்கின்றோம். வயதானவர்கள், பெரியோர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் இணைந்து கொளுத்தும் வெயிலில் போராட வந்திருக்கிற போது, எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு தற்காலிகக் கொட்டகை (பந்தல்) கூட அமைப்பதற்குப் பொலிஸார் அராஜகமாகத் தடுக்கின்றனர்.

அதுவும், ‘இங்கு வடக்கில் நீங்கள் கொட்டகை அமைத்துப் போராட்டம் செய்தால், தெற்கில் விமல் வீரவங்ச போன்றவர்கள் கொட்டகை அமைத்துப் போராட்டம் செய்வார்கள்’ எனப் பொலிஸார் அப்பட்டமாகக் கூறுகின்றனர். அப்படியானால் இந்த அரசாங்கம் எதைப் பற்றிச் சிந்திக்கிறது? பேரினவாதத்திற்கு அஞ்சியே எமது உரிமைகளை அரசு மறுக்கின்றது. ஆக, கடந்த கால அரசுகள் மட்டுமல்ல, அநுரவின் இந்த அரசையும் நம்பி நாங்கள் ஏமாந்து போய்விட்டோம். எமது காணிகளில் இப்போது கூடப் படையினர் விவசாயம் செய்து வருகின்றனர். அத்துடன், அந்தக் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கவும் இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிகின்றோம்.

எனவே, எமது காணிகளில் இருந்து படையினர் உடனடியாக வெளியேறி, எமது நிலங்கள் எங்களிடமே முழுமையாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் காணிகள் மீட்கப்படும் வரை இப்போராட்டத்தைக் கைவிட மாட்டோம்.” – என்றனர்.

இதன்போது மக்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “மக்களின் பூர்வீகக் காணிகள் நிபந்தனையின்றி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதையே நாமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்” என்றார். அத்துடன், இந்தத் தன்னிச்சையான காணி ஆக்கிரமிப்புக்கள் மற்றும் சுவீகரிப்பு முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், அந்த வழக்குகளின் தற்போதைய முன்னேற்ற நிலவரங்கள் குறித்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0