“டிட்வா” புயலால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசத்துக்கு நிவாரணமாக 42 மில்லியன் மாத்திரமே கிடைத்துள்ளது!
“டிட்வா” புயலால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 86 மில்லியன் ரூபா நிவாரணம் தேவைப்படுவதாக விபரங்களை அனுப்பி வைத்திருந்தோம். எனினும், அரசாங்கத்திலிருந்து இதுவரை 42 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைத்துள்ளது. இன்னும் 44 மில்லியன் ரூபா வர வேண்டியுள்ளது என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று முன்தினம் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு எமது சபையின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், அவர் மலையகத்துக்கும் தமிழகத்துக்கும் உறவுப் பாலமாக இருக்க வேண்டும்.
கொட்டகலை பிரதேச சபையின் புதிய கட்டிடத்துக்கான நிர்மாணப் பணிகள் 2016 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கபப்ட்டது. கடந்த 10 வருட காலமாக கட்டிடம் பூர்த்தியாகவில்லை. 27 மில்லியன் ரூபா நிலுவை கொந்தரத்துக்காரருக்கு செலுத்த வேண்டியுள்ளது. மேலும் கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்னும் 6 – 7 கோடி ரூபா தேவைப்படுகின்றது. அத்தோடு பெருந்தொகைப் பணத்தை வங்கிக் கடனுக்கு மாதாந்தம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முன்வந்துள்ளது. எனவே, அந்தக் கட்டிடத்தை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 30 வருடக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதற்காக மத்திய மாகாண ஆளுநரின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் உடனடியாக வேலைகளை ஆரம்பிக்க உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.
அத்தோடு, கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள ஏரியை நகர அபிவிருத்தி சபை குத்தகைக்கு எடுத்து சிறுவர் பூங்கா மற்றும் பொழுது போக்கு வசதிகளோடு சுற்றலாத் தலமாக மாற்றி, பலதரப்பட்டவர்களும் வருகை தரும் போது, பிரதேச சபைக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடிய வேலைத் திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எமது பிரதேச சபை எல்லைக்குள் சபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு சபைக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை கடந்த காலங்களில் பயனபடுதியுள்ளோம். எனவே, எதிர்காலத்தில் இத்தகையை அத்துமீறல்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், எமது பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவச முன்னோடிப் பரீட்சையை பிரதேச சபையின் ஊடாக எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். 34 பாடசாலைகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறவுள்ளார்கள். மாணவர்களின் வசதி கருதி கொட்டகலை, தலவாக்கலை ஆகிய இரண்டு இடங்களில் முன்னோடிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
மேலும், எமது பிரதேச மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொண்டு பயனடையும் வகையில் “வேர்ல்ட் விசன்” நிறுவனம் 2500 லீற்றர் கொள்ளளவு கொண்ட பவுசர் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
