நெல் வயலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த துயரம்.!
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை கந்தசாமி என்பவரே உயிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வருடகாலமாக நெல் வயல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளார். வயலில் தங்குவதற்கு உயரமான கட்டடம் அமைக்கப்படுள்ளது. அதிலிருந்து ஒரு முறை தவறிவிழுந்துள்ளார். இதையடுத்து தரையில் உறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ நேரம் காட்டு யானை வயல் வாடியிலுள்ள நெல் மூட்டையினை உட்கொண்டதை அவதானித்து இவர் யானையை விரட்ட முற்பட்டவேளை அந்த யானை இவரை தாக்கிய பின்னர் தூக்கிவீசியதால் அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வயல்வெளியில் சேற்றில் புதைந்து காணப்பட்டது.
திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
ஆயித்தியமலை பொலிஸார் இச் சம்பவம் குறித்து குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.