39 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா: அரசாங்கம் புதிய திட்டம் அறிவிப்பு.!
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டை கொண்டவர்களுக்கு 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தேவையான சட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.இந்த முன்மொழிவு பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் முன்வைக்கப்பட்டதுடன், அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 39 நாடுகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்த திட்டத்தின் மூலம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கையை உலகின் முன்னணி சுற்றுலா இலக்குகளில் ஒன்றாக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.