ஊழல் குற்றச்சாட்டு: வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும் – நாமல் தெரிவிப்பு.!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிட்டு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கும் வரை காத்திருக்காமல் அவர் தானாகவே பதவி விலக வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, அரசாங்கமே முறைகேடுகள் இடம்பெற்றதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் மூலம் ஏற்படும் நட்டத்தை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு ஊழல் தொடர்பில்லை என முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது வலுசக்தி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அந்தக் கூற்றுகளுக்கு முரணானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசியல் சக்திகள் நாட்டின் அரசியல் தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
மூத்த தலைவர்களை புறக்கணிப்பது தவறு என்றும், புதிய தலைமுறைகள் உருவாக அனுபவமிக்க தலைவர்களின் வழிகாட்டல் அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.கடந்த தவறுகளை திருத்தி, நவீன அணுகுமுறையுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.