மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஜூலை 28 வரை ஒத்திவைப்பு.!
யாழ்ப்பாணம் மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்தப் புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.இந்தச் சம்பவம் தொடர்பாக, தனது மகனை இழந்த 81 வயதுடைய ஸ்டீபன் மரில்டா மற்றும் தீவக முன்னேற்றக் கழகத் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இன்றைய விசாரணையின் போது, பொலிஸார் தரப்பிலிருந்து சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட தரப்பும் காணாமற்போனோர் அலுவலகத்தினரின் பிரதிநிதிகளும் முன்னிலையாகினர்.முன்னதாக, புதைகுழி அகழ்வுப் பணிக்கான வசதிகள் இல்லை என பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு மீண்டும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.