மின்கட்டண உயர்வு, பொருளாதார நெருக்கடி குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் அவசர ஆலோசனை.!
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய்வதற்காக, கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று கொழும்பு நாராஹேன்பிட்டியவில் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக மின்உற்பத்தி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனைத் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.அத்துடன், “தரமற்ற நிலக்கரி” தொடர்பான கருத்தரங்கு தொடர்களை மாத்தறை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் நிமல் சிறிபால டி சில்வா, பாடலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.இதேவேளை, மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் விசேட ஊடக சந்திப்பு நாளை நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.