நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவு.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
அத்துடன் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 24 அடி குறைந்துள்ளது. இன்னும் 96 அடி நீர்த்தேக்கத்தில் உள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 41 அடி குறைந்துள்ளது. அதேபோல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 3 மீற்றர் குறைந்துள்ளது 1191 மீற்றர் நீர்த்தேக்கத்தில் உள்ளது. கென்யோன் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 33 மீற்றர் குறைந்துள்ளது 670 மீற்றர் நீர்த்தேக்கத்தில் உள்ளது.
மலையகத்தில் உள்ள அனைத்து காட்டாறுகள் நீர் வீழ்ச்சிகள், ஓடைகள் என்பனவற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக மலையக பகுதியில் பல நகரங்கள், கிராமங்கள், தோட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர்த்தேக்கங்களான காசல்ரீ, மேல் கொத்மலை, மவுஸ்சாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக எதிர்காலத்தில் நீர் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா மற்றும் ஏனைய ஓடைகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான மாஎலிய ஓயா, ஹட்டன் ஓயா என்பன ஓடைகளாகி மிக மிக சொற்பளவில் நீரையே வழங்குகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் மின் தடை ஏற்படும் அபாயமும் உள்ளது.

