யூரியா உர விநியோகத்தில் கட்டுப்பாடு: நெற்செய்கைக்கு மாத்திரம் முன்னுரிமை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிக் காரணமாக நாட்டுக்குள் யூரியா உரத்தின் கையிருப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நடப்பு சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் யூரியா உரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2026 சிறுபோக நெற்செய்கைக்கு கலக்கப்படாத யூரியா உரத்தை விவசாய சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயியும் பயிரிடும் நிலப்பரப்பின் அளவுக்கு ஏற்ப மட்டுமே உரம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரக் கையிருப்பைச் சரியாக முகாமைத்துவம் செய்து, 2026 சிறுபோக நெற்செய்கை தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும்திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.