ஏப்ரல் முதல் பெற்றோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை ; அதிரடி உத்தரவு !
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைத் தொடர்ந்து,
ஏப்ரல் முதலாம் திகதி முதல் ரஷ்ய அரசாங்கம் பெற்றோல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க தீர்மானித்துள்ளது.
இந்தத் தடையானது ஏப்ரல் 1ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 31 ஆம் திகதி வரை நான்கு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது .
எரிசக்தி அமைச்சகத்திற்கு ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், இது தொடர்பான தீர்மானத்தை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதும், விலையை நிலைப்படுத்துவதும் இந்த அதிரடி முடிவின் முக்கிய நோக்கமாகும்.
ரஷ்யாவில் வசந்தகால விவசாயப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாலும், சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாலும் உள்நாட்டு பெற்றோல் தேவையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் உற்பத்தி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
மசகு எண்ணெய் சுத்திகரிப்பு அளவு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிலையாக இருப்பதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 50 இலட்சம் மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றுமதி செய்துள்ள நிலையில் இந்தத் தடையானது சீனா, பிரேசில் மற்றும் துருக்கி போன்ற ரஷ்ய எரிபொருளை நம்பியிருக்கும் நாடுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மத்திய கிழக்கு நெருக்கடியால் உலகச் சந்தையில் நிலவும் குழப்பம் விலை மாற்றங்களுக்குக் காரணமாகிறது. அதேசமயம், “ரஷ்ய எரிசக்திக்கு வெளிநாடுகளில் பெரும் தேவை இருப்பது சாதகமான விடயம்” என அலெக்சாண்டர் நோவாக் குறிப்பிட்டுள்ளார்.