நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி.!
இலங்கைக்கு அவசரகால எரிபொருள் உதவியை வழங்கிய இந்தியாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“அவசரகால எரிபொருள் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு நாங்கள் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உண்மையான உறவுகள் என்பது வசதியான காலங்களில் அல்ல, மாறாக நெருக்கடியான மற்றும் இக்கட்டான காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இந்த உதவி மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகின்றது.
எமது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், எமக்குத் துணையாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.” – என்று சஜித் பிரேமதாஸ தனது பதிவில் மிகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஹரி ஆனந்த’ கப்பல் மூலம் 36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ள நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.