பொலிஸார் அரசியல் நோக்கத்தில் செயற்படுகின்றனர் – நாமல் குற்றச்சாட்டு .!
மக்கள் விடுதலை முன்னணியின் வழிகாட்டுதலுக்கு இணங்க பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார் என்றும், பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெறுகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.மேலும், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியை காரணம் காட்டி மக்கள்மீது சுமைகளை திணிக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்றும், அந்த நிலையை சமாளிக்கும் திறன் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நெருக்கடி நிலைகளை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றஞ்சாட்டிய அவர், தாம் அந்த வகையில் செயற்படமாட்டோம் என்றும் மக்களை வீதிக்கு இறக்கவோ போராட்டங்களைத் தூண்டவோ திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்னுற்பத்தி குறைபாடு தொடர்பான எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகவும், தரமற்ற நிலக்கரி கொள்வனவால் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நோக்கங்களுடன் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.