மலைநாட்டு தொடருந்து பாதை சீரமைப்பு இறுதிக் கட்டம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கள ஆய்வு.!
சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா பேரழிவினால் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் மட்டுமல்லாது, பொதுமக்களின் அடிப்படை வசதிகளும் கடுமையாக சேதமடைந்தன. இதில் இலங்கையின் ரயில் பாதை அமைப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை சீரமைக்கும் பணிகள் “நாடு மீள்கட்டமைப்பு” தேசிய திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கொழும்பு – பதுளை மலைநாட்டு ரயில் பாதையில் நானுஓயா மற்றும் அம்பேவெலா இடையிலான எல்ஜின் நீர்வீழ்ச்சி அருகே நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க 25.03.2026 அன்று நேரில் ஆய்வு செய்தார்.இந்த பேரழிவினால் நானுஓயா முதல் அம்பேவெலா வரையிலான பாதையில் 14 இடங்களில் நிலச்சரிவு, இடிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதம் ஏற்பட்டிருந்தது.
அதில் 13 இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து வழக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது எல்ஜின்நீர்வீழ்ச்சி மற்றும் அம்பேவெலா இடையிலான கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வில் ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள், உட்பட பிராந்திய பிரதம பொறியாளர் தனுஷ்க திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.