இங்கிலாந்தில் பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு.!
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இங்கிலாந்தின் பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 3 சதவீதமாக நிலைத்துள்ளது. இது 2026 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி தொடர்கிறது.
இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஈரான் போரால் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதால், எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில், பணவீக்க உயர்விற்கு ஆடைத் துறை முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது. அதேவேளை, மோட்டார் எரிபொருள் விலை குறைவு, பணவீக்கத்தைத் தணிக்கும் வகையில் கீழ்நோக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிசக்தி, உணவு, மதுபானம் மற்றும் புகையிலை போன்ற நிலையற்ற கூறுகளைத் தவிர்த்து கணக்கிடப்படும் முக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு 3.1 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகஉயர்ந்துள்ளது.இதனுடன், சேவைத் துறையின் பணவீக்கம் 4.4 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.