ஐரிஸ் டெனா கப்பலில் மீட்கப்பட்ட 22 பேர் வெலிசறை கடற்படைத் தளத்திற்கு மாற்றம்.!
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ போர்க்கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 22 மாலுமிகள், நேற்று நள்ளிரவு பலத்த பாதுகாப்புடன் வெலிசறை கடற்படைத் தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காலி கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்ட 32 மாலுமிகள் காலி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 22 பேரே இவ்வாறு சிகிச்சை முடித்து வெளியேறியுள்ளனர்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மேற்படி 22 மாலுமிகளும், நேற்று நள்ளிரவு பொலிஸார் மற்றும் கடற்படையினரின் விசேட பாதுகாப்பு வலயத்துக்குள் வெலிசறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சர்வதேச ரீதியில் இந்தப் போர் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த இடமாற்ற நடவடிக்கையானது மிகவும் இரகசியமாகவும் தீவிர பாதுகாப்புடனும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள ஏனைய மாலுமிகள் வைத்தியசாலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.