வீரவனிதையர் விருது விழாவில் 20 சாதனைப் பெண்களுக்கு மகுடம்.!
புதிய அலை கலை வட்ட மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வீரவனிதையர் விருது விழா’ மற்றும் சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொழும்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பிரபல தொழிலதிபர் பி.எஸ். செல்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழகத்திலிருந்து வருகை தந்த கவிஞர் தங்கம் மூர்த்தி, ‘தினகரன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், டாக்டர் கனகலட்சுமி மற்றும் காயத்ரி விக்கிரமசிங்க, எம்.யோகராஜா, ஆர்.வைத்தியமாநிதி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது, சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பெண்களுக்கு ‘வீரவனிதையர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
புதிய அலை கலை வட்டத்தின் நிறுவுநர் ராதாமேத்ராவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விழாவின் ஓர் அங்கமாக இளங்கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
பெண்மையைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










