சட்டத்தின் ஆட்சி எங்கே? – ரணில் மற்றும் குமார ஜயகொடி விவகாரங்களை முன்வைத்து தயாசிறி சாடல்.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சட்டம் இருவேறு விதமாகச் செயற்படுத்தப்படுகின்றது என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிணை வழங்குவது அல்லது வழங்காதது தொடர்பான விடயங்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் பின்னரே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதேநேரம், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவர் விடயத்தில் சட்டம் கையாளப்படும் விதம் குறித்துக் கேள்வி எழும்புகின்றது.
பிணை வழங்குவது தொடர்பாக அமைச்சர் குமார ஜயகொடியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், நேரடியாகக் குற்றப்பத்திரிகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே விடயத்தில் இருவேறு முறைகளில் சட்டம் செயற்படுத்தப்படுவது ‘சட்டத்தின் ஆட்சி’தானா?
எனவே, குற்றப்பத்திரிகை கையளிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சர் குமார ஜயகொடியும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.