சுகாதார விதி மீறல்: செங்கலடி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக ரூ. 70,000 அபராதம் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
ராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவு நீரை திறந்த வெளியில் வெளியேற்றியதும், வண்டுகளுடன் கூடிய உணவு மூலப்பொருட்களை உணவு தயாரிப்பிற்காக களஞ்சியப்படுத்தியதும்கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவக உரிமையாளருக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், திருத்த நடவடிக்கைகள் நிறைவேறும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடவும், கைப்பற்றப்பட்ட கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு, கடலை உள்ளிட்ட பொருட்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

