ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை அவர்களின் சட்டபூர்வ கடமைகளிலிருந்து விடுவித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு, மேலதிக சாட்சிய விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மற்றொரு வழக்குத் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சாகிர் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணைகளை மார்ச் 18ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.2010 முதல் 2014 வரை வர்த்தக அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சதொச ஊழியர்களை அவர்களின் கடமைகளில் இருந்து விலக்கி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதாகக் கூறி, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோரும் பிரதிவாதிகளாக உள்ளனர்.