போதைப்பொருள் ஒழிப்பு வாரம்: பருத்தித்துறையில் பொலிஸார் விழிப்புணர்வு நடவடிக்கை.!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயல் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பருத்தித்துறை பொலிஸாரால் பொதுமக்களுக்கிடையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வின் போது “விற்கும் – பயன்படுத்தும் அனைவருக்கும் அறிவிப்பு: விலகிச் செல்லுங்கள்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஒட்டுப்பலகைகளும் ஒட்டப்பட்டன.போதைப்பொருளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஒட்டுப்பலகைகளும் ஒட்டப்பட்டன. அதேபோல் அரச அலுவலகங்கள் மற்றும் பொதுஇடங்களிலும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த வாரம் முழுவதும் நடைபெறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்பதன் மூலம் பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற சூழலாக மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“போதை ஒழிப்பு – நமது பொறுப்பு; இளைஞர்களைப் பாதுகாப்போம், சமூகத்தைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்த போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வில் பருத்தித்துறைபொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.