அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பணியக் கூடாது! – விமல் எச்சரிக்கை
இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதரகம் அழுத்தம் விடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.
அவர், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இணங்குகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். துறைமுக அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்தால் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார். எனினும், இவ்விடயத்தில் அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இராணுவக் கண்காட்சிக்குச் சென்ற மூன்று ஈரானியக் கப்பல்களில் ஒன்று தற்போது பாணந்துறை கடற்பரப்பிற்கு அப்பால் ஆழ்கடலில் நிலைகொண்டுள்ளதாகவும், அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இக் கப்பல் இராணுவ நடவடிக்கைக்காக வரவில்லை என்றும், தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி கோரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையின் அணிசேரா வெளியுறவு கொள்கையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய விமல் வீரவங்ச, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.