உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்:மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே.!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதனை நீதிமன்றத்தில் அறிவித்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் மூன்றாவது சந்தேகநபராக சேர்க்கப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் குறிப்பிட்டது.இந்த நடவடிக்கை தொடர்பாக அரசியல் மற்றும் பாதுகாப்பு தரப்புகளில் பரபரப்பு நிலவுகிறது.