அவசரமாக இந்தியா சென்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்.!
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அவசரமாக இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குப் பயணமானார்.இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் புவிசார் அரசியல் மாநாடான ரைசினா கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச கடற்பரப்பில் இலங்கைக்கு அண்மித்த பகுதியில் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பின்னரே அமைச்சர் விஜித ஹேரத்தின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளமை அரசியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
குறித்த ஈரானிய போர்க்கப்பல் இந்தியாவில் நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் எல்லைகளின் நிலைமை தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் அமைச்சர் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் பங்கேற்பு, தற்போதைய பதற்றமான சூழலில் பிராந்திய உறவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.