அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? தயாசிறி கேள்வி.!
ஈரானிய கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கேள்வியை முன்வைத்தார்.
இந்திய கடற்படைப் பயிற்சிக்காக ஈரானிய கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இவ்வாறான சூழலில் இலங்கை ஒரு நாடாக பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 1971 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கமைய இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் தற்போதைய சூழலில் இலங்கை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும்குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து பெரும் வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து அரசாங்கம் இதுவரை எந்த கண்டனமும் வெளியிடவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும்தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பினார்.