கலைத்துறைக்கு சிறப்பு அங்கீகாரம் – மட்டக்களப்பில் பிரமாண்ட விழா.!
இலங்கையின் பல பகுதிகளில் பல்துறை கலைத்துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கலைஞர்களை கௌரவிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் இலங்கையில் உருவான முதல் திரைப்படமான அந்தோனி திரைப்படத்தின் பெயரை தாங்கிய “அந்தோனி வேல்ஸ்” எனும் விருது வழங்கும் விழாவாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
வேவ் டான்ஸ் ஸ்ரூடியோ இயக்குநர் எஸ். கிருஸ்ணகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி, மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் “அந்தோனி” திரைப்படக் குழுவினர் விசேடமாக கலந்துகொண்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்றனர். பல்வேறு கலைத்துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 40க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விசேடமாக தென்னிந்திய சினிமாவில் தனித்துவம் பதித்துவரும் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் பொத்துவில்அஸ்மின் மற்றும் சீதமிழ் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற சபேசன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
