மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மாசிமகப் பஞ்சரத பவனி!
வரலாற்றுப் புகழ் மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாசி மகோற்சவத்தின் உச்ச நிகழ்வான பஞ்சரத பவனி இன்று (02) திங்கட்கிழமை பக்திப் பெருக்கோடு சிறப்பாக நடைபெற்றது.அதிகாலை 1.00 மணியளவில் உதயகால பூஜையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. மூலஸ்தான அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகம் ஆகியவை ஆகம முறைகளின்படி மிகுந்த பக்தியுடன் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து காலை 8.00 மணியளவில் இரதோற்சவ வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீ முத்து மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர், ஸ்ரீ முத்துமாரியம்பாள் மற்றும் ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய ஐந்து மூர்த்திகளும் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளினர்.தேவர்களால் சாத்தப்பட்ட பிரத்யேக ரோஜா மாலைகளை அணிந்து, இராஜகோபுர வீதி வழியாக ஐந்து தேர்களில் ஆரோகணித்த மூர்த்திகள் பிரதான வீதி வழியாக வீதி உலா வந்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் பஞ்சரதங்கள், பக்தி முழக்கங்களின் நடுவில் இன்று இரவு முழுவதும் நகரைச் சுற்றி வீதி உலா வருகின்றன. மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 1.00 மணியளவில் இராஜவீதியூடாக மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடையவுள்ளன.
அம்மன் திருக்கோயிலுக்கு வந்தடைந்த பின், வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சைசாத்துதல் வைபவம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மீகப் பெருவிழாவைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் மாத்தளை நகரில் திரண்டுள்ளனர்.