மன்னார் நகர சபையில் பல கோடி ரூபாய் ஊழல் மோசடி அம்பலம்.!
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மற்றும் நகர சபையின் முன்னாள் செயலாளர் பிரிட்டோ ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு யினரால் கைது செய்யப்பட உள்ளதாக தெரிய வருகிறது.
மன்னார் நகர சபையினால் கடந்த கால தலைமைத்துவத்தின் கீழ் சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கிய போது பல்வேறு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக தேசிய கணக்காய்வு அலுவலக பிரதிநிதிகள் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
கடந்த கால தலைமைத்துவத்தின் கீழ் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கி போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர சபைக்கு 5 கோடியே 31 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய காலப்பகுதியில் மன்னார் நகர சபையின் தவிசாளராக செயல்பட்ட ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் அப்போதைய நகர சபையின் தவிசாளராக இருந்த பிரிட்டோ ஆகியோருக்கு எதிராக தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மேலதிக நடவடிக்கைகளுக்கு கடந்த வாரம் மன்னாரிற்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் மன்னார் நகர சபைக்குச் சென்று நகர சபைத் தலைவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவரின் நெருங்கிய உறவினர்களிடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மேலும் 10 லட்சம் ரூபாய் நகர சபைக்கு வருமானம் இழப்பு கண்டுபிடிக்க பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளை குறித்த அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.மேலும் மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மேற்கொண்ட பல லட்சம் ரூபாய் மோசடிகள் தொடர்பாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் வருமானத்திற்கு மேலாக மன்னார் மற்றும் கொழும்பில் சொத்து சேர்த்துள்ளமை குறித்தும்,அவருடைய மோசடிகளுக்கு உறுதுணையாக செயல்பட்ட மன்னார் நகர சபையின் அப்போதைய செயலாளர் பிரிட்டோ லெம்பேட் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த இருவரையும் கைது செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலதிக நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதோடு,அவர்களின் கைது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வட மாகாண ஆளுநரின் மேலதிக உத்தரவை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும் குறித்த ஊழல் மோசடி குறித்து இன்றைய தினம் மன்னார் நகர சபை அமர்வின் போது சபை தவிசாளரினால் சுட்டிக் காட்டப்பட்ட நிலையில்,முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான அன்ரனி டேவிட்சன் சபையில் குழப்ப நிலையை ஏற்படுத்தி இருந்தார்.அவருக்கு சார்பாக அவரது கட்சியை சேர்ந்த மன்னார் நகர சபை உறுப்பினர் பேனட் பிரசன்னா என்பவர் செயல்பட்டார்.
இவர் கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததோடு,பிரபல போதைப்பொருள் மாபியாக்களுடன் செயல்பட்ட நிலையில்,துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருந்தார்.
தற்போது வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி,பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்ற அவரை மன்னார் நகர சபையின் முன்னை நாள் தவிசாளரும்,தற்போதைய உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தனது ஆதரவிற்கான அரவணைத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.