உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு வராது.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
30 பார்வைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உலர் மிளகாயைத் தவிர ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியில் எவ்வித தடங்கலும் ஏற்படாது எனவும், சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திப் பொருட்களின் விலைகளை நியாயமற்ற வகையில் அதிகரித்தால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினூடாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கிடைப்பனவு மற்றும் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தினோம். இந்தியாவில் நிலவும் ‘எல் நினோ’ காலநிலைத் தாக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் உலர் மிளகாயின் இறக்குமதி தொடர்பான பிரச்சினையே பிரதானமாக முன்வைக்கப்பட்டது. மிளகாயைத் தவிர ஏனைய அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் தடங்கலின்றி இறக்குமதி செய்து சந்தைக்கு விநியோகிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் உறுதியளித்தனர்.

இந்தியாவில் ‘எல் நினோ’ காலநிலைத் தாக்கம் மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக உலர் மிளகாயின் ஈரப்பதன் அதிகரித்துள்ளது எனவும், இவ்வாறான நிலைமை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளின்படி, இறக்குமதி செய்யப்படும் உலர் மிளகாயின் ஈரப்பதன் 12 சதவீதத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.

அதற்கு அதிகமாகக் காணப்படும் மிளகாயைச் சந்தைக்கு விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சில கொள்கலன்கள் துறைமுகங்களில் தேங்கியுள்ளன. இது மிளகாய்க்கான தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல. மாறாக, ஈரப்பதன் அளவு தொடர்பான தரநிலையைப் பூர்த்தி செய்ய முடியாமையே இதற்குக் காரணமாகும். இந்நிலைமை தொடருமானால் எதிர்காலக் கொள்கலன்களில் ஈரப்பதன் 13 முதல் 14 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் நடைமுறைப்படுத்தக்கூடிய இடைக்கால இணக்கப்பாடொன்றை எட்டுவது அவசியமாகியுள்ளது. ஈரப்பதனைக் கட்டுப்படுத்தி, 12 சதவீதத்துக்குக் குறைவான அளவில் மிளகாயை நுகர்வோருக்கு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளையும் நுகர்வோர் நலன்களையும் கருத்திற்கொண்டு இதற்கான தீர்வு ஆராயப்படும்.

‘எல் நினோ’ தாக்கத்தால் இந்தியாவில் சில பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுச் சந்தைகளிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் தட்டுப்பாடு அல்லது விநியோகத் தாமதத்தைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் நியாயமற்ற வகையில் விலைகளை அதிகரிக்க அனுமதிக்க முடியாது. கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் விலைகள் தீர்மானிக்கப்படுவதில் ஆட்சேபனையில்லை. எனினும், நுகர்வோரைச் சுரண்டி அதிக இலாபம் ஈட்ட முயன்றால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நுகர்வோர் அலுவல்கள் பேரவையினூடாக நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்பட்டால் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட தலையீடுகளும் மேற்கொள்ளப்படும். நியாயமான இலாபத்துடன் விலைகளைத் தீர்மானிக்குமாறு வர்த்தகர்களிடம் கோரியுள்ளோம்.

உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு உருளைக்கிழங்கு, வெங்காய அறுவடைகள் நிறைவடைந்துள்ளதால் தற்போது இறக்குமதிப் பொருட்களே சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் புதிய அறுவடைகள் கிடைக்கும் காலம் ஆரம்பித்துள்ளதால், ‘எல் நினோ’ தாக்கம் தீவிரமடைந்து உற்பத்தியைப் பாதிக்காத பட்சத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் மேலும் குறையக்கூடும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0